கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் வசித்து வரும் பாவனி  என்ற 19 வயது இளம்பெண் பெங்களூரில் உள்ள மகாராணி கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகின்றார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி அவர் கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாவணியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதாவது மாணவி எளிதில் பணம் சம்பாதிக்க ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் 15 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்த நிலையில் அந்த பணம் அவருக்கு திரும்பக் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சக தோழிகளிடமிருந்து பத்தாயிரம் ரூபாயை அவர் கடன் வாங்கிய நிலையில் மீதி 5 ஆயிரம் ரூபாய் கிடைக்காமல் இருந்துள்ளார். இந்த பண பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள்.