மத்திய மந்திரி எல். முருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புதிய தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை, இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி தமிழக மக்களை திசை திருப்பி வரும் தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்கச் செய்யுங்கள் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஜி அவர்கள் வலியுறுத்தியும் அதைச் செய்யாமல் இருப்பது ஏன்? எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் நாடகங்களை நிகழ்த்திய நீங்கள், இன்று ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு தமிழ் மொழிக்காக ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்யாமல் ஏன் இன்னும் தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களே, கடந்த 2 ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்கள் தங்களிடத்தில் வைத்து வந்த கோரிக்கையை வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் வைத்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் அவர்களது தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை வழங்கி வருகின்ற நிலையில், தமிழ் மொழியில் நமது மாணவர்களை படிக்க வைப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை, தமிழக மக்களிடத்தில் கூறுவதற்கு தற்போது நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.