
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது..
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் அதிரடியாக தனது முதல் டி20 சதத்தை ( 63 பந்துகளில் 126 நாட் அவுட்; 12 பவுண்டரி, 7 சிக்சர்) பதிவு செய்தார். மேலும் ராகுல் திரிபாதி (22 பந்துகளில் 44; 4 பவுண்டரி, 3 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (13 பந்துகளில் 24; பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்டியா (17 பந்துகளில் 30; 4 பவுண்டரி, சிக்சர்) ஆகியோரின் சிறப்பான இன்னிங்சுசன் கில்லின் அதிரடி சதம் உறுதுணையாக இருந்தது.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது இந்திய அணி. இஷான் கிஷான் (1) மட்டும் ஏமாற்றம் அளித்தார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களில் பிரேஸ்வெல், டிக்னர், சோதி, டேரில் மிட்செல் ஆகியோர் ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் 235 ரன்களை இலக்காகக் கொண்டு ஸ்கோரைத் துரத்த நியூசிலாந்து அணி மிகவும் மோசமான தொடக்கத்தையே பெற்றது. முதல் ஓவரில் பில் ஆலனும்(3), இரண்டாவது ஓவரில் கான்வேயும்(1) பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் பேட்டிங் செய்ததில் எந்த வீரரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.. முழு அணியிலும் 2வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்ட முடிந்தது, அதிகபட்சமாக டேரில் மிட்செல் 35 ரன்களும், சான்ட்னர் 13 ரன்களுடனும் எடுத்தனர். நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. இதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்று தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது..
இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் இந்திய அணி சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது, 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி டி20யில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன் 2018 ஜூன் மாதம் 29ஆம் தேதி மலாஹைடில் அயர்லாந்திற்கு எதிராக 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர்களின் (இந்தியா) முந்தைய சாதனையை இந்த வெற்றி முறியடித்தது. 2022 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியாவின் 3வது பெரிய வெற்றியாகும்.
அதேசமயம் சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 2ஆம் இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் இலங்கை அணி 2007 ஆம் ஆண்டு கென்யாவை 172 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் இலங்கை 261 ரன்கள் டார்கெட் நிர்ணயித்தது. பின் ஆடிய கென்யா 88ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
𝐀 𝐰𝐢𝐧 𝐭𝐨 𝐫𝐞𝐦𝐞𝐦𝐛𝐞𝐫 😃
Congratulations to #TeamIndia who register their biggest T20I victory by margin of runs 👏👏#INDvNZ | @mastercardindia pic.twitter.com/mhMvpurJYk
— BCCI (@BCCI) February 1, 2023