தமிழக சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் 15 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சத்தியமங்கலத்தில் புதிதாக சித்த மருத்துவ பிரிவு ரூ‌.15 லட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோன்று பவானி அரசு மருத்துவமனையில் ரூ. 1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களில் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநிம்  முழுவதும் சுமார் 8,66,619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 32,404 கடைகளில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரிய வந்த நிலையில் அந்தக் கடைகளிலிருந்து 2,86,681 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் 20 கோடியே 91 லட்சத்து 19,468 ரூபாயாகும். இதைத்தொடர்ந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 17,481 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடைகளுக்கு 33 கோடியே 28 லட்சத்து 13,600 ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்பட்டது என்று கூறினார்.