கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள யாரா தர்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டதில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த திருவிழாவை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் அப்பகுதியிலுள்ள வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதில் பேக்கரி கடை உரிமையாளரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று அவர்கள் 11 பவுன் தங்க நகைகள், 1.25 லட்சம் ரொக்கமும், 1.500 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். அதற்கு அருகில் இருந்த வீட்டில் 2 பவுன் நகை, 2.25 லட்சம் ரொக்கம் மற்றும் 600 கிராம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களையும் திருடி சென்றுள்ளனர்.

அதைப்போன்று தொடர்ச்சியாக மர்ம நபர்கள் 4 வீடுகளில் திருடி உள்ளனர். இதில் ஓட்டுனராக பணிபுரியும் ரவியின் வீட்டு கதவை உடைத்த அவர்கள் என்ன என்ன பொருட்கள் கிடைக்கும் … என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே சென்று பார்த்ததில் எதுவும் கிடைக்காததால் சமைத்து வைத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு தட்டை கழுவாமல் அங்கேயே வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இதை தொடர்ந்து திருவிழா முடிந்தவுடன் வீட்டுக்கு வந்தவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த அவர்களுக்கு நகை மற்றும் ரொக்கம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையிடம் இச்சம்பவத்தை பற்றி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தவுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.