ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா (33), தனது பி.டெக் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, 2014-ம் ஆண்டு ஐதராபாத் நகருக்கு வந்தார். அங்கு வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றியதால், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. புகைப்படத்தை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்துக்கொண்டு, தனது மோசடி நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளார்.

வம்சி கிருஷ்ணா, திருமண தகவல் வலைதளங்களில் தனது உண்மையான விவரங்களை மறைத்து, தன் தாயார் அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றுகிறார் என்றும், தானும் உள்ளூரில் வியாபாரம் செய்து வருகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் வலைதளங்களில் அறிவித்தார். இதனை நம்பிய ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வம்சி கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர்.

அவர்களுடன் தொடர்புகளை வளர்த்த பிறகு, அவர் பெண்களிடம் வெவ்வேறு காரணங்களைக் கூறி பணம் வாங்கத் தொடங்கினார். தனது நிறுவனத்தில் ஆய்வு செய்ய ஐடி அதிகாரிகள் வந்து, பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர் எனக் கூறி, சிலரிடம் பணம் பெற்றார். மேலும், தன்னுடைய பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியும், ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை பெற்றுள்ளார். இந்த முறையில், மொத்தமாக ரூ.2.2 கோடி வரை மோசடி செய்துள்ளார். பின்னர், பணத்தை திரும்பக் கேட்ட பெண்களை அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்த மோசடி குறித்து ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் டாக்டர் ஒருவர், ரூ.11 லட்சம் கடன் பெற்று திருப்பிக்கொடுக்கவில்லை என போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் வம்சி கிருஷ்ணாவை எதிர்த்து புகார் அளித்தனர். பெங்களூருவில் பதுங்கியிருந்த வம்சி கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருமண தகவல் வலைதளங்களில் அடிக்கடி நிகழும் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.