
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நேற்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் கல்வித்துறை தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு கல்வி அமைச்சர் பசங் டோர்ஜி சோனா பதில் அளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, மாநிலம் முழுவதும் செயல்படாத நிலையில் மற்றும் மாணவர் சேர்க்கை குறைந்த விகிதத்தில் ஏராளமான பள்ளிகள் இருந்தது. இதனால் அந்த பள்ளிகள் அனைத்தையும் அரசு மூட முடிவு எடுத்தது. அதன்படி மொத்தமாக 600 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
அதன் பிறகு மிகக் குறைந்த அளவில் மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளை வேறு சில பள்ளிகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு இன்னும் சில பள்ளிகளையும் மூடுவதற்கும் அரசு முடிவு செய்துள்ளது. மொத்தமாக மாநிலத்தில் 2,800 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 7600 க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை சரி செய்யப்பட்டு வருவதோடு, ஆசிரியர் நியமனத்திற்கான நியாயமான தேர்வுகளை நடத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.