கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தில் பாண்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தந்தை அண்ணப்பா. இந்த நிலையில் பாண்டுக்கு தனது தந்தை மீதுள்ள ஒரு கோடி ரூபாய் காப்பீடு பணம் மீது ஆசை வந்துள்ளது. இதனால் தனது தந்தையை கொலை செய்து பணத்தை பெற திட்டமிட்டார். பாண்டு தனது தந்தையை தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி அண்ணப்பா இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த பாண்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தனது தந்தையின் தலையில் உருட்டு கட்டையால் அடித்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு பாண்டு அண்ணப்பாவின் உடலை சாலையோரம் வீசிவிட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனது தந்தை இறந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் காப்பீடு தொகைக்காக ஆசைப்பட்டு பாண்டு தனது தந்தையை கொலை செய்தது உறுதியானது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.