தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 38 வயதான பிரேம்சாகருக்கும் அவரது நண்பர் அரவிந்துக்கும் இடையே நடந்த சண்டையில் பிரேம்சாகர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய பிரேம்சாகர் காந்தி நகரில் இருக்கும் பிரியாணி கடைக்கு சென்றுள்ளார்.

59 ரூபாய் பிரியாணி கடை என புகழ் பெற்று விளங்கும் அந்த கடைக்கு பிரேம் சாகரும் அரவிந்தும் சென்றுள்ளனர். அப்போது கடையில் வாங்கிய பிரியாணிக்கு பிரேம்சாக போன் பே மூலமாக 60 ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். அதனை பார்த்த அரவிந்த் நீயே ஒரு ஆட்டோ ஓட்டுனர். பிரியாணிக்கு கூடுதலாக ஒரு ரூபாய் தருகிறாயே என்றும், அவ்வளவு பெரிய ஆள் ஆகி விட்டாயா என கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த பிரேம்சாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நான் என்ன பிச்சையா எடுக்கிறேன் என்றும் கோபமாக கேட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அரவிந்த் பிரேம்சாகரை காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய பிரேம்சாகர் கீழே விழுந்த போது சாலையில் கிடந்த கல் தலையில் பட்டு ரத்தம் கொட்டியது. மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வடிந்ததால் அவர் சுயநினைவை இழந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் பிரேம்சாகரின் சகோதரர் வித்யாசாகருடன் இணைந்து அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிறுமூளையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேம்சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை கேட்டு அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்து நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.