
உத்தரகாண்டில் கான்பூரில் உள்ள தொகுதியில் உமேஷ் குமார் என்பவர் எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவருக்கும், முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் இடையே அரசியல் மோதல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உமேஷ் குமாரை ஒரு முறைகேடான குழந்தை என்று முன்னாள் எம்எல்ஏ விமர்சனம் செய்தார். இதை கேட்ட அவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கோபமடைந்து, குன்வர் வீட்டின் முன்பாக சென்று கோஷம் எழுப்பினர். அப்போது தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வா என்று சவால் விடுத்தனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று முன்னாள் எம்எல்ஏ குன்வர் அவருடைய ஆதரவாளர்களுடன் கையில் துப்பாக்கியுடன் உமேஷ் குமார் அலுவலகத்திற்குச் சென்று அவருடைய ஆதரவாளர்களை தாக்கினர். அதோடு தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியைக்கொண்டு அலுவலகத்தை நோக்கி சுட்டனர். இதில் 70 குண்டுகள் அலுவலகத்தில் உள்ள சுவர்களை துளைத்தது. இதில் யார் மீதும் குண்டு பாயவில்லை. இந்த தாக்குதலில் எம்எல்ஏ-வின் உதவியாளர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து குன்வர், தனது ஆதரவாளர்களுடன் அங்கு வளம் வந்து, நெஞ்சை நிமிர்த்தியபடி நடந்து சென்றார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் உமேஷ் குமார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தனது அலுவலகத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால், உமேஷ் குமார் பெரும் கோபமடைந்தார். இதைத்தொடர்ந்து அவரும் ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு குன்வர் வீட்டை நோக்கி நடந்து சென்றார். ஆனால் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குன்வர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.