
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் ஜக்காரியா- முபினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாத முகமது யாகியா என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜக்காரியா தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் பரம்பிக்குளம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு மாலை காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஆனைமலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற அரசு பேருந்து மீது மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காயமடைந்த ஜக்காரியா, முபினா, முகமது யாகியா, உறவினர்களான யாசியா, நஸ்யா, ஆயிஷா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பத்து மாத குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.