
சென்னை பெரிய மேட்டை பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். அப்போது 17 வயது சிறுவன் ஒருவர் அந்த மாணவியிடம் டியூஷனுக்கு சென்று படித்துள்ளார். அப்போது மாணவிக்கும் அந்த மாணவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவி சிறுவனிடம் பேசுவதை தவிர்த்த நிலையில் சிறுவன் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அந்த சிறுவன் மாணவியை பழிவாங்க முடிவு செய்தான். இதற்காக ஒரு நூதன முறையில் பிளான் போட்டான்.
அதாவது amazon, flipkart, ஸ்விகி போன்ற பல்வேறு ஆன்லைன் செயலிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொருட்களை மாணவியின் வீட்டிற்கு ஆர்டர் போட்டுள்ளான். அதன்படி ஆர்டர்கள் மாணவியின் வீட்டிற்கு வந்த நிலையில் கேஷ் ஆன் டெலிவரி என்று கூறி ஊழியர்கள் பணம் கேட்டுள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் மாணவியும் குடும்பத்தினரும் நாங்கள் ஆர்டர் செய்யவில்லை என கூறியுள்ளனர். இதனால் சில சமயங்களில் அந்த ஊழியர்கள் அவர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனை அந்த சிறுவன் வேடிக்கை பார்த்துள்ளான். அதுமட்டுமின்றி ஓலா மற்றும் ஊபர் வாகனங்களை 77 முறை புக் செய்து மாணவியின் வீட்டிற்கு அனுப்பினார். இதனால் அந்த மாணவியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் சம்பந்தப்பட்ட சிறுவன் கைது செய்யப்பட்டான். மேலும் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் மனரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.