கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பெரிய அளவிலான மோசடி சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சம் பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க மையங்கள் தொடங்கப்பட்டன. அதன் போது சில கிராமப்புறங்களில் வேலைக்கு வந்ததாக கூறப்படும் நபர்களின் புகைப்படங்களில் அதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு தவறுகள் காணப்பட்டன.

அதாவது சில ஆண்கள் பெண்கள் வேடத்தில் சேலை மற்றும் முகக் கவசம் அணிந்து, ஏரியில் வேலை செய்வது போல நடித்துப் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் திட்ட கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்ட தேசிய மொபைல் கண்காணிப்பு சேவையில் (NMMS) பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்த அடிப்படையில் வேலை செய்ததாக காட்டி ஊதியம் பெறப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் ரூபாய் வரை தவறாக பெற்றது தற்போது அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் மல்லேஷ் கூறியதாவது, “சில அதிகாரிகள் கமிஷன் பெறும் நோக்கத்தில் வெளியூர் நபர்களை அழைத்து வந்து, வேலை செய்தது போல கணக்கீடு செய்து ஊதியம் பெற்றுள்ளனர். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” எனக் கூறினார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.