
மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை விடுவிக்கவில்லை என்று திமுக அரசு குற்றம் சாட்டியதோடு அதற்கான நிநியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மத்திய பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை விடுவித்து விட்டதாக கூறும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் திமுக மிகப்பெரிய ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கு தற்போது அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பதை விசாரணை ஆணையம் அமைத்து மத்திய பாஜக அரசு கண்டுபிடிக்கட்டும். இந்தியாவில் தமிழ்நாடு தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையாது என்று உள்துறை மந்திரி கூறிவரும் நிலையில் வட மாநிலங்களில் தொகுதிகள் உயர்த்தப்பட மாட்டாது என்று உறுதியளிக்க தயாரா.? தமிழ்நாட்டின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்ததாக கூறுகிறார். ஆனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி விரைவில் அமையும் என்று அமித்ஷா கூறுகிறார். மேலும் இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும் என்றார்.