கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள பகுதியில் ஷாகா குமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்யாற்றின்கரை என்ற பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு 52 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த அருண்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

தன்னைவிட 25 வயது அதிகம் உள்ள பெண்ணை பணத்துக்காக அருண் திருமணம் செய்து கொண்டார். இதனால் திருமணத்திற்கு வேறு யாரையும் அழைக்காமல் தனது நெருங்கிய நண்பன் ஒருவரை மட்டும் அழைத்து திருமணம் செய்து இருக்கிறார்கள்.

திருமணத்தின் போது ஷாகா குமாரியின் வீட்டார் 50 லட்சம் ரூபாயும், 100 பவுன் நகைகளையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். அதே சமயம் திருமணத்தை குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று ஷாகா  குமாரிடம் அருண் கூறியுள்ளார்.

இருப்பினும் அவர் தனது திருமண போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து உள்ளனர். இதையடுத்து அருணின் பிற நண்பர்கள் வயதுக்கு மூத்தவரை திருமணம் செய்ததாக கூறி கிண்டல் செய்துள்ளனர்.

இதற்கிடையே அருண் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஷாகா கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருண் அவரை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று தனது வீட்டில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாடினர்.

அதன் பின் அவர்கள் சென்ற பிறகு ஷாகாவை கழுத்தில் நெறித்துள்ளார். அதன் பின் அவர் மயங்கி விழுந்ததும், மின்சாரம் பாய்ச்சி அவரை கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக பகுதி மக்கள் கூறியதை அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, ஷாகா கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து அருண் கைது செய்யப்பட்டார்.

அருண் பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னைவிட 25 வயது அதிகமான பெண்ணை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.