
சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு 11 வயது ஆகும் நிலையில் அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தான். இவர் நேற்று பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் மேசை மின்விசிறியை ஆன் செய்ய முயற்சித்தார்.
அதற்காக ஒரு சேப்டி பின்னை கொண்டு மேசை மின்விசிறியில் உள்ள பட்டனை அழுத்திய நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சூர்யா தூக்கி வீசப்பட்டான். உடனடியாக பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.