திருவள்ளூர் மாவட்டத்தில் ஜெயா நகரில் வசித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று அந்த மாணவியும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் தேர்வு நடைபெறும் நாளின் அதிகாலை வீட்டின் மொட்டை மாடிக்கு படிப்பதற்காக சென்ற மாணவி திடீரென தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மாணவியின் கதறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்ற பெற்றோர் அதிர்ச்சியில் உடனடியாக மாணவியை நெருப்பிலிருந்து மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடல் முழுவதும் 80% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி நேற்று மார்ச் 4ஆம் தேதி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதில் மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92% மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. நன்றாக படிக்கும் மாணவி என்பதால் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருக்காது எனவும் மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.