
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே ஒரு மலை கிராமத்தில் 30 வயதான மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு 14 வயது சிறுமியுடன் கடந்த 4-ம் தேதி கர்நாடகாவில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதற்கு அந்த சிறுமியின் தாய் நாகம்மா (29) உதவி செய்துள்ளார். திருமணம் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் தங்கள் கிராமத்திற்கு சென்றனர். இதற்கிடையில் சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று பலமுறை கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அந்த சிறுமி மாதேஷ் வீட்டில் இருந்து தப்பி அந்த பகுதியில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார். இதை அறிந்த மாதேஷ் அங்கு சென்று சிறுமியை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து சிறுமியின் பாட்டியிடம் காவல்துறையினர் புகாரை பெற்றனர். மேலும் மாதேஷ் அவருடைய அண்ணன் மல்லேஷ், நாகம்மா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.