
திண்டுக்கல் மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கவினாஸ்ரீ என்ற இளம் பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக நிலவிய இடப்பிரச்சனையை காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், இருவரது காதலுக்கும் இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், நேற்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இருவரும் மேஜர் வயதினர் என்பதால், காவல்துறையினர் ஆலோசனை நடத்தி அய்யர்சாமியுடன் கவினாஸ்ரீயை அனுப்பி வைத்தனர்.
இந்த நேரத்தில், காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த பிறகு புதுமண தம்பதியினர் காரில் ஏறினர். அப்போது இரு வீட்டாரும் அவர்களை நடுரோட்டில் காரிலிருந்து இழுத்து கீழே வீசி, சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தினால் அந்த பகுதியில் பதற்றம் நிலவ, காவல்துறையினர் உடனடியாக இரு வீட்டாரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த தம்பதியர் மீது அவர்களது சொந்த குடும்பத்தினர் நடத்திய இந்த தாக்குதல், சமூக வட்டாரங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.