
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஒரு பெண் தனது 9 வயது மகளுடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குருசாமி என்பவர் தனது 15 வயது மகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் இருசக்கர வாகனத்தை தனது மகளை இயக்க அனுமதித்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி இருசக்கர வாகனத்தை தவறாக இயக்கியதால் சாலை ஓரத்தில் நடந்து வந்த 9 வயது சிறுமியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதோடு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளுக்கு வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது என்றும், அவ்வாறு அனுமதித்தால் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.