தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நோயற்ற வாழ்வை உருவாக்க வேண்டும் என்றால் கூடுதலாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்க வேண்டும். ஆனால் திமுக அரசு அதற்கு முரணாக செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையை திமுக அரசு மூடிய நிலையில் தற்போது நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையை மூட முயற்சித்து வருகிறது.

நாகையில் 150 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த பல்நோக்கு மருத்துவமனை இயங்கி வரும் நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஓமத்தூரில் தொடங்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு பழைய மருத்துவமனையை முழுவதுமாக திமுக அரசு கடந்த வருடம்  மாற்றிய  நிலையில் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு போன்றவைகள் பழைய மருத்துவமனையில் செயல்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது பழைய மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் மருத்துவ மாணவர்கள் மட்டும் இருப்பதாகவும் அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலமாக புதிய மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாகவும் கூறி நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி நாகையில் அரசு மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.