ராஜஸ்தான் மாநிலம் சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளை அமைந்துள்ளது. இவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். பின்னர் இளம்பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

சமீபத்தில் அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பித்து வந்த 16 வயது சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காயத்ரி, அனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது பீகார், மேற்குவங்கம், ஒடிசா, உத்தர பிரதேசத்தில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குனரான காயத்ரி விஸ்வகர்மா விலைக்கு வாங்கி விடுவார்.

அதன் பிறகு காயத்ரி அந்த பெண்களை 2 முதல் 5 லட்ச ரூபாய் பணத்திற்கு திருமணம் செய்து கொள்ள விரும்பும் வாலிபர்களுக்கு விற்று வந்துள்ளார். இளம்பெண்களின் நிறம் உயரம் வயதிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து வந்துள்ளனர். இவ்வாறாக காயத்ரி 1500 திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். அவர் மீது ஏற்கனவே 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது