
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் ராமச்சந்துரு(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ராமச்சந்துருவும் அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராமச்சந்துரு சிறுமியை அழைத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடி விட்டார். அதன் பிறகு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
இதனையடுத்து போக்சோ சட்டத்தில் கைதான ராமச்சந்துரு ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார். அதன் பிறகு இரண்டு குடும்பங்களுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியின் குடும்பத்தினர் புகாரை வாபஸ் வாங்கியதால் ராமச்சந்துரு விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ராமச்சந்துரு தனது காதலியை பலமுறை பார்க்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. செல்போன் மூலமும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
இதனால் மன உளைச்சலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராமச்சந்துரு தனது உடலில் ஜெலட்டின் குச்சிகளை கட்டிக்கொண்டார். அதன்பிறகு தனது காதலியின் வீட்டிற்கு முன்பு சென்று அதனை வெடிக்க வைத்ததால் ராமச்சந்துரு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ராமச்சந்துரு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ராமச்சந்துரு பாறைகளை தவிர்க்க பயன்படுத்தும் ஜெலட்டினை உடலில் கட்டி வெடிக்க வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.