
அமெரிக்காவில் ஸ்டான்லி ஷாங்(19) வயது சிறுவன் வசித்து வருகிறார். இவரது தந்தை நன் ஷாங். இந்த சிறுவன் தனது படிப்பில் அசாத்திய சாதனை புரிந்துள்ளார். அதாவது 3.97 GPA, 4.42 weighted GPA மற்றும் 1590 SAT மதிப்பெண்களுடன் அவர் நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்களில் முதல் 2,000 இடங்களில் இடம்பெற்றுள்ளார். மேலும், 13வது வயதிலேயே கூகுள் நிறுவனத்தில் PhD நிலைக்கு இணையான வேலைக்கான அழைப்பைப் பெற்றிருந்தார். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், அவர் கூகுளில் முழு நேர மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் விண்ணப்பித்த 18 பல்கலைக்கழகங்களில், யூனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ் மற்றும் யூனிவர்சிட்டி ஆஃப் மேரிலாந்து ஆகிய 2 இடங்களில்தான் சேர்க்கை கிடைத்தது. ஆனால், UC பெர்க்லி, UCLA, MIT, ஸ்டான்போர்ட், கார்னெல், ஜார்ஜியா டெக், கால்டெக் உள்ளிட்ட 16 முன்னணி பல்கலைக்கழகங்கள் அவரை நிராகரித்தன. இதனால், அவரது குடும்பம் யூனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா அமைப்பை (UC System) மற்றும் யூனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டனை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது. இவர்களின் முக்கியக் குற்றச்சாட்டு, உயர்நிலை கல்வி நிறுவனங்கள் ஆசிய அமெரிக்க மாணவர்களை அநீதி முறையில் புறக்கணிக்கின்றன என்பதுதான்.
மேலும், வழக்குத் தொடர எவ்வொரு சட்ட நிறுவனமும் தயாராக இல்லை என்பதால், தாங்களே AI கருவிகள் (ChatGPT, Gemini) மூலம் 300 பக்க வழக்கறிக்கை தயாரித்துள்ளனர். “ஆசிய மாணவர்கள் உயர்ந்த தரத்திலான தேர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றவை வெறும் கதைகள் என்று நினைத்தேன். ஆனால் எனது மகன் ஒவ்வொரு நிராகரிப்பையும் சந்திக்கும்போது அதிர்ச்சியுற்றேன். அதன்பிறகு அது வெறுப்பாகவும், கோபமாகவும் மாறியது,” என்று நன் ஷாங் தெரிவித்தார். மேலும், “இது அமெரிக்காவின் அடிப்படை அடையாளத்துக்கு எதிரானது. இத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கின்றன என்பதைப் பற்றி கவலைப்படவில்லை” என்றார். இதனால், இவர் இன்னும் பல பல்கலைக்கழகங்களை எதிர்த்து வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிராகரிப்பால் ஏமாற்றமடைந்த ஸ்டான்லி ஷாங், தற்போது உயர்கல்விக்கான தனது திட்டங்களை ஒத்திவைத்துள்ளார். ஆனாலும், எதிர்காலத்தில் உயர்கல்வியை தொடரும் விருப்பத்தை முற்றிலும் கைவிடவில்லை என்று தெரிவித்துள்ளார். வழக்கு தொடர்ந்ததன் பின்னர் சமூக ஊடகங்களில் அவரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதால், அவர் பொது கவனத்திலிருந்து தற்காலிகமாக விலக முடிவு செய்துள்ளார்.