
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டெப்யூ செய்த வைப்பவ் சூர்யவன்ஷி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 34 ரன்கள் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் அவருடைய இனிங்ஸ் சிறப்பாக இருந்தது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த அடுத்த போட்டியில் அவர் 12 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக், வைப்பவ் சூர்யவன்ஷிக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் பிரபலம் ஆனால், தன்னை ஸ்டார் ஆட்டக்காரன் என்று நினைத்து நின்றுவிடக்கூடாது. இன்னும் நீண்ட பாதை இருக்கிறது. பாராட்டும் வரும், விமர்சனமும் வரும். அதற்கேற்ப நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என கூறினார்.
மேலும், விராட் கோலியின் தடங்களை பின்பற்ற வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “விராட் கோலி 19 வயதில் ஐபிஎல் ஆடத் தொடங்கி இன்று 18 சீசன்கள் விளையாடியுள்ளார். அந்த மாதிரியான நீண்ட கால இலக்கை வைபவ் வைத்திருக்க வேண்டும். ‘இப்போ நான் பிரபலமாகிவிட்டேன், முதல் பந்திலேயே சிக்ஸ் அடிச்சேன், இப்போ சரிப்பா’ என்ற எண்ணத்தில் இருந்தால், அடுத்த சீசனில் அவரை நாம் பார்க்க முடியாது,” என உணர்ச்சியுடன் கூறினார்.
சேவாகின் இந்த வார்த்தைகள், சிறந்த டெப்யூவுக்கு பிறகு, தனக்கு கடின உழைப்பு மட்டுமே நீடித்த வெற்றியைத் தரும் என்பதை வைபவ் புரிந்துகொள்ள வேண்டிய நேரமாகிறது. புகழ் பெற்ற இளம் வீரர்களுக்கு, இந்த அறிவுரை ஒரு முக்கியமான பாடமாக அமைவதற்கான வாய்ப்பு உள்ளது.