
திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா(23). இவருக்கு மார்ச் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 22-ஆம் தேதி நிர்மலா தனது தாய் சரஸ்வதி, அக்கா மகன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு திருப்பூர்- ஊத்துக்குளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் நிர்மலாவின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நிர்மலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நிர்மலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கவில்லை. இதனால் நிர்மலாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் நிர்மலாவின் உறவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.