கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் பத்மினி ராணி என்ற 59 வயது பெண் வசித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவருடைய கணவர் மகேஸ்வர் ராவ் இறந்துவிட்டார். இதனால் தன்னுடைய ஒரே மகளுடன் அவர் தனியாக வாழ்ந்து வந்தார். இவருடைய மகள் ஷாகிதி சிவப்பிரியாவுக்கு 17 வயது இருந்த நிலையில் மிகவும் அன்பாகவும் பாசத்தோடும் அவர் வளர்த்து வந்தார்‌. இந்நிலையில் சாஹிதி தான் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதாக தன் தாயிடம் கூறிய நிலையில் பின்னர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

அதோடு தான் தோல்வி அடைந்ததற்கு தன் தாய் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். பின்னர் பத்மினி தன்னுடைய மகளின் தோழிகளிடம் விசாரித்த போது மொத்தம் 4 பாடங்களில் தோல்வியடைந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மினி தன் மகளிடம் இது குறித்து கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபத்தில் தன் மகளை அவர் சமையல் செய்யும் கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் கடந்த வருடம் நடைபெற்ற நிலையில் பத்மினியை ஏப்ரல் 29ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன்னுடைய மகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெளிநாடு செல்வார் என்று நான் உறவினர்களிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் தேர்வில் தோல்வியடைந்தது எனக்கு அவமானமாக போனதால் கோபத்தில் கொலை செய்ததாக கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பத்மினியை குற்றவாளி என்று கூறியது. மேலும் தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினர்.