திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பாப்பனூத்து பகுதியுள்ளது. இங்கு ராதாகிருஷ்ணன் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு அவருடைய வீட்டில் மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது புரோக்கர் ஒருவர் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை காண்பித்துள்ளார்.

அந்தப் பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பிடித்ததால் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் பெண் வீட்டார் கஷ்டப்படுவதாக புரோக்கர் கூறிய  நிலையில் மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணுக்கு ஒன்றரை பவுனில் நகை வாங்கி போட்டுள்ளனர். அதோடு புரோக்கருக்கு கமிஷனாக ரூ.80,000 கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்தப் பெண் தனக்கு மாதவிடாய் இருப்பதாக கூறி முதலிரவை தவிர்த்து விட்டார். அதன் பிறகு மறுநாள் தன்னுடைய பெற்றோருக்கு உடல் நலம் சரியில்லை எனவும் அவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து தன் மனைவியை பொள்ளாச்சிக்கு ராதாகிருஷ்ணன் அழைத்து சென்ற நிலையில், திடீரென அவர் மாயமாகிவிட்டார். பின்னர் அவரை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது அந்தப் பெண் நகை மற்றும் பணத்திற்காக அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதோடு புரோக்கர் என்று கூறயவர் அந்தப் பெண்ணின் கணவர் எனவும் இவர்கள் இருவரும் சேர்ந்து பலரை இதுபோன்று திருமணம் செய்து மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணவன் மனைவியை தேடி வருகிறார்கள்.