ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்பாடி ஏ.எம் பேட்டையில் சற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளிகளான பாலாஜி, விக்னேஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு சற்குணம், பாலாஜி, விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பெருங்களத்தூர் கூட் ரோடு அருகே சென்ற போது எதிரே வந்த ரோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விக்னேஷ், சற்குணம் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சற்குணம் பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.