நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர். பஜார் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஷாலினி. சதீஷ்குமார்- ஷாலினி தம்பதியினருக்கு நிதிஷ்(5), பிரணிதா(3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். தம்பதியினர் இருவரும் அதே பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தம்பதியினர் இருவரும் தங்களது குழந்தைகளுடன் வழக்கம் போல வேலைக்கு சென்று உள்ளனர்.

குழந்தைகளை விளையாட விட்டு விட்டு ஷாலினி வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். சதீஷ்குமார் ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். வேலை பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி திடீரென குழந்தைகளை காணவில்லை என்பதால் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் குழந்தைகள் கிடைக்கவில்லை. அப்போது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள சுமார் 5 அடி ஆழ கிணற்றில் சென்று பார்த்த போது குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கியபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனைப் பார்த்த தாய் ஷாலினி அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.