கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் பாலச்சந்தர்-கோமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாக்கடை வடிகால் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் குழி தோண்டும் போது பாலச்சந்தரின் வீட்டு பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்ததால் அதனை சரி செய்து தருமாறு ஒப்பந்ததாரரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்த இடத்தில் சாக்கடை வடிகால் அமைப்பதற்காக கான்கிரீட் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதனால் கோபமடைந்த பாலச்சந்தரும், அவரது மனைவியும் கான்கிரீட் அமைக்கும் குழிக்குள் இறங்கி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சேதமடைந்த வீட்டின் பக்கவாட்டு சுவரை சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு கணவன், மனைவி இருவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.