கர்நாடக மாநிலம் பெங்களூரில் பத்மநாபா நகரில் கடந்த மே 15ஆம் தேதி 20 வயது கல்லூரி மாணவி பிரபுதா என்பவர் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீஸ் ஆர் 9 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் அவருடைய தம்பியின் நண்பரான 14 வயது சிறுவனை கைது செய்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் பிரபுதாவை கொலை செய்ததை அந்த சிறுவன் ஒப்புக்கொண்டான். பிரபுதாவின் தம்பியும் கொலை செய்த சிறுவனும் நெருங்கிய நண்பர்கள்.

இருவரும் தற்போது பத்தாம் வகுப்பு செல்ல உள்ள நிலையில் அருகில் உள்ள கால்பந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பிரபுதாவின் கை பையில் இருந்து 2000 ரூபாயை அந்த சிறுவன் திருடியுள்ளான். இதனை கண்டறிந்த கல்லூரி மாணவி பணத்தை தருமாறு கூறியதுடன் இது குறித்து சிறுவனின் பெற்றோரிடமும் போலீசிலும் கூறி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த சிறுவன் கடந்த மே 15 ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் பிரபுதாவின் வீட்டுக்குள் நுழைந்து, மன்னிப்பு கேட்பது போல காலில் விழுந்து நடித்து காலை பிடித்து இடறி விட்டுள்ளார்.

இதனால் தலையில் காயம் பட்ட பிரபுதா அப்படியே மயங்கி விட்டார். பிறகு பாத்ரூமுக்கு இழுத்துச் சென்ற சிறுவன் கையில் வைத்திருந்த பிளேடால் கையை அறுத்து அவரை தற்கொலை செய்தது போல மாற்ற திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே அந்தப் பெண் இதே போன்று தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சிறுவன் இவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளான். ஆனால் சுயநினைவு திரும்பிய பிரபுதாஸ் சிறுவனின் முகத்தில் கைகளால் கீறி காயங்கள் ஏற்படுத்தியதால் அவரின் கழுத்தை இறுக்கி மூச்சு திணறடித்து மயக்கம் அடைய வைத்து மீண்டும் பிளேடால் கீறி 15 நிமிடங்களுக்குள் ரத்தம் வடிய விட்டு இருக்கிறார் அந்த சிறுவன்.

பிறகு அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி விட்டான். இதனைத் தொடர்ந்து பிரபுதா இறந்துவிட்டார் என்ற தகவல் அறிந்து பெற்றோருடன் அந்த சிறுவன் பிரபுதா வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது பிரபுதாவின் தம்பி சிறுவனின் முகத்தில் இருந்த காயத்தை பற்றி கேட்டபோது சிறுவன் கூறிய கதையை நம்பாமல் சந்தேகப்பட்டு பெற்றோரிடம் கூற , போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுவனை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.