
அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் மீண்டும் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் இணைய வாய்ப்பே கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். இன்று கூட ஓநாயும் ஆடும் எப்படி ஒன்றாக சேர்ந்து பயணிக்க முடியும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார் இபிஎஸ். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, எடப்பாடி கூறும் வார்த்தைகள் ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவருமே தவிர நடைமுறைக்கு ஒத்து வராது. அதிமுகவில் பிரிந்து இருக்கக்கூடிய அனைத்து சக்திகளும் மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். இந்த கருத்து தமிழக மக்களால் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கைதான். அண்ணா எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கூட இரு மொழிக் கொள்கையை தான் பின்பற்றினார்கள். மேலும் தூய உள்ளம் கொண்ட அதிமுக தொண்டர்கள் யாரும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள் என்று கூறினார்.