காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று விடும் என்று கூறினார். அதாவது 6 சதவீத வாக்குகளை மட்டுமே சீமான் வைத்துள்ளதாகவும் 50 சதவீத வாக்குகள் விஜய்க்கு செல்லும் எனவும் கூறியவர் விஜய் பார்த்து சீமானுக்கு அச்சமென்று தெரிவித்தார். இதற்கு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கார்த்தி சிதம்பரம் விஜயால் என்னுடைய வாக்கு வங்கி பாதிக்கும் என்று கூறிய நிலையில் நான் அவரை போட்டிக்கு அழைக்கிறேன்.
இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிடுவோம். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் யார் வெற்றி பெறுகிறார் என்று பார்க்கலாம். இதில் கண்டிப்பாக கூட்டணி வைக்கக் கூடாது. நான் கூட்டணி வைக்காமல் தேர்தலில் போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றுள்ளேன். இன்னும் ஒன்றரை வருடங்கள் தான் இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நான் யார் என்று தெரியும். பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடியவர்கள் அல்ல என்னை விரும்பிய மற்றும் எனக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள். என்னுடைய கட்சியிலிருந்து பிற கட்சியில் சேர்ந்தவர்கள் என்று கூறுபவர்கள் முதலில் அவர்களிடம் உள்ள நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை காட்டட்டும் என்று கூறினார்.