விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சார்பில் அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சர் பொன்முடி பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சர் பொன்முடி பேசியதாவது, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். நமக்குள் சிறிய பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு ஒற்றுமையாக வேலை பார்க்க வேண்டும். நீங்கள் பிரச்சார பீரங்கிகள். சட்டசபை தேர்தலில் யார் நம்மை எதிர்த்து நின்றாலும் நம் தலைவர் முதல்வர் ஸ்டாலின் அடையாளம் காட்டும் நபர் தான் வெற்றி பெறுவார் என்று நம்ப வேண்டும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம். இருப்பினும் நம் கட்சி சார்பிலும் கூட்டணி கட்சிகள் சார்பிலும் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஏற்கனவே தமிழகத்தில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டபோதில் உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு வனத்துறை அமைச்சராக பொன்முடி நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது அவர் வருகிற தேர்தலில் எனக்கு கூட சீட் கிடைக்காது என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.