உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரி (Mainpuri) மாவட்டத்தில் 1981-ம் ஆண்டு நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக, 44 ஆண்டுகளுக்கு பின் மூன்று பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திஹுலி கிராமத்தில், சந்தோஷ் சிங் (Santosh Singh) மற்றும் ராதே ஷியாம் (Radhe Shyam) தலைமையிலான கொள்ளை கும்பல் நவம்பர் 18, 1981-ம் ஆண்டு நுழைந்து, 24 தலித் சமூகத்தினரை சுட்டுக்கொன்றது. இதில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். அவர்களின் பொருட்களையும் கொள்ளையடித்த இந்த கும்பல், அந்த கிராமத்தில் பெரும் அச்சத்தை உருவாக்கியது.

இந்த சம்பவம் நடந்ததும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி (Indira Gandhi) சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய்  துக்கம் அடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார். இந்த கொடூர சம்பவத்திற்கான விசாரணை தொடங்கப்பட்டு, லெயக்சிங் என்பவர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 பேரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீண்ட கால விசாரணையின் போது, குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர், இதில் முக்கிய குற்றவாளிகள் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் உள்ளனர்.

நீதிமன்ற விசாரணையில் மீதமுள்ள நால்வரில், ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில், கப்தான் சிங் ராம் சேவக், ராம் பால்  ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. இவர்களுக்கு மார்ச் 18, 2025-ம் தேதி இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது குற்றவாளிகள் மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.