
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 54% வரி விதித்ததை எதிர்த்து, சீன அரசு தற்போது ஹாலிவுட் திரைப்படங்களை தடை செய்துள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கான கலாச்சார மற்றும் வருவாய் ரீதியான பதிலடி என கருதப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்கள் சீனாவில் மொழிமாற்றத்துடன் நேரடியாக வெளியிடப்பட்டு, அதிக அளவில் வசூலிக்கும் தன்மை கொண்டது.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்கள், உலகளவில் செய்யும் மொத்த வசூலில் சுமார் 10% வரை சீனாவிலிருந்து பெறுகின்றன. சீனாவில் ஆண்டுக்கு 34 வெளிநாட்டு படங்களுக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதில், சீன அரசு 25% வருவாயைப் பெறுகிறது. இருப்பினும், சீன அரசு தற்போது எடுத்துள்ள தடை நடவடிக்கையால், இந்த வருவாயும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், திரைப்படத் துறையிலும் அமெரிக்கா–சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமாகிறது. ஏற்கனவே கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட வரி விதிப்பை அமெரிக்கா விதித்துள்ளது. இப்போது, சீனா ஹொலிவுட் படங்களை தடை செய்வதன் மூலம், கலாச்சார வர்த்தகத்திலும் தாக்கம் ஏற்படுகிறது. இந்த நிலைமை தொடருமாயின், உலகளவில் திரைப்பட விநியோகம் மற்றும் வர்த்தகத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 34 சதவீத வரியை சீனா திரும்பப் பெறாவிட்டால் 104% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் அதற்காக 24 மணி நேரம் காலக்கெடுவும் கொடுத்திருந்தார். மேலும் இந்த காலக்கெடு முடிவடைந்ததால் தற்போது 104 சதவீத வரி அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.