ஆந்திர மாநிலத்தில் உள்ள மங்களகிரி பகுதியில் உள்ள ஆட்டோ நகரில் வாட்டர் சர்வீஸ் மையம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் அகோரி ஒருவர் காரில் வந்துள்ளார். இவர் நிர்வாண நிலையில் வந்த நிலையில் தன்னுடைய காரை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பெண் அகோரி ஒருவர் நிர்வாணமாக வந்ததாக அந்த பகுதியில் தகவல் பரவிய நிலையில் பொதுமக்கள் அங்கு கூடியதோடு அவரை வீடியோ எடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அவர்களை தன் கையில் இருந்த திரிசூலத்தால் தாக்க முயன்றார். இதனால் அங்கிருந்தவர்கள் சாலையின் தடுப்பு சுவரில் ஏறியும் குதித்தும், தப்பி ஓடிய நிலையில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் பெண் அகோரியை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் ஆகாததால் அவரை ஒரு கயிறால் கட்டிப்போட்டு பின்னர் அவர் உடம்பில் ஒரு துணியை சுத்தினர். பின்னர் அவர் கையில் இருந்து திரிசூலத்தை பறிமுதல் செய்தனர். சிறிது நேரம் கழித்து அவரை அவிழ்த்து விட்ட நிலையில் மீண்டும் தாக்க முயன்றார். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை அங்கிருந்து தெலுங்கானா எல்லையில் சென்று விட்டனர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.