
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் விஜயின் முதல் மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செயற்குழு கூட்டத்தை நடத்தி முடித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்து விட்டதால் இன்று அவருடைய கட்சியின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறுகிறது. முதலாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு விழா என தனித்தனியாக இரு நிகழ்ச்சிகளாக நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அது முடியாததால் தற்போது ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்த விழா மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்டில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2500 தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நிலையில் அவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரூம் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி இன்று காலை 10 மணியளவில் தொடங்கும் நிலையில் பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசும் நிலையில் கட்சியின் முக்கிய தலைவர்களும் பேசுகிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.