
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் தாப்பாத்தி பகுதியில் வசித்து வருபவர் முருகையா. இவருக்கு சுஜீவன் (26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுஜீவன் அதே பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால் இதனை கவனித்த சிலரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். இதன் பின்னர் சுஜீவன் மீது எட்டயபுரம் காவல் நிலைய காவல்துறையினர் குழந்தை கடத்தல் சட்டப்பிரிவு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மார்ச் 18 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குற்றம் சாட்டப்பட்ட சுஜீவன் மீது குழந்தை கடத்தல் மற்றும் போக்சோ குற்றத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மேலும் ரூபாய் 7000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த வழக்கை திறன்பட செயல்பட்டு விசாரணை நடத்திய எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் இளவரசு, அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சிறப்பாக வாதாடி தண்டனை பெற்றுக் கொடுத்த அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக செயல்பட்டு வந்த ஏட்டு சங்கர கோமதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட்ஜான் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.