
மதுரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 38 வயது திருப்பதி என்ற நபர், தாமதமாக திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவியால் ஏமாற்றப்பட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பதி தனது புகாரில் கூறியதாவது, “13 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தேன். 38 வயதிலும் திருமணம் ஆகாமல் இருந்ததால், கடந்த வருடம் உறவினர்களின் மூலம் மதுரை இளம் பெண்ணை திருமணம் செய்தேன். அவர், தனது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்தார்,” எனத் தெரிவித்துள்ளார்.
திருமணம் நடந்த பின்னர் 15 பவுன் நகைகளை அவரிடம் கொடுத்ததோடு 3 மாதங்கள் கழித்து சவுதிக்கு சென்று விட்டேன். சவுதியில் வேலை பார்க்கும் போது, மனைவியிடம் சரிவர தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மன அழுத்தத்திற்கு ஆளான திருப்பதி, இந்தியா திரும்பியுள்ளார். அதற்குப் பிறகு மனைவியை தேடிச் சென்றபோது, அவர் 3-வது திருமணம் செய்து சென்னையில் வாழ்ந்து வருவது தெரிந்ததாக கூறியுள்ளார்.
மேலும், அவரது முதல் கணவர் கார்த்திக் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் திருப்பதியால் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஏமாற்று நடவடிக்கையில் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் இணைந்திருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், பெண்ணின் முதல் கணவர் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், ஏமாற்றிய பெண் மற்றும் அவரது உறவினர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
மதுரை போலீஸ் கமிஷனர், இந்த வழக்கை நன்கு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.