நாடாளுமன்ற மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு செலவுகள் குறித்த கணக்கை மத்திய அரசிடம் கேட்டார். அதாவது கடந்த 3 வருடங்களில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு செலவுகள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு அவர் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்ட நிலையில் தற்போது இந்த கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கெரிட்டா பதில் வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா சென்றதற்காக மட்டும் 22 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஜப்பான் பயணத்துக்காக 17.2 கோடி ரூபாய் மற்றும் இத்தாலிக்கு 14.36 கோடி ரூபாய் செலவானதாகவும் வெளிநாட்டு பயணச் செலவுக்கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச செலவு கடந்த 2022-ம் ஆண்டு நேபாளுக்கு சென்ற பயணத்தில் 80 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில் பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அலுவல் ரீதியாக பயணம் மேற்கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று கடந்த வருடம் அமெரிக்காவுக்கு செல்வதற்காக 15.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 வருடங்களில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயண செலவுகளுக்காக மொத்தமாக 258 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.