திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டமலைபட்டியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் 12- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராமன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

நேற்று அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மூழ்கி அழுகிய நிலையில் கிடந்த ராமனின் உடலை மீட்டனர். அவரது உடலோடு சேலையால் கட்டப்பட்டிருந்த பாறாங்கல் ஒன்று இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராமனின் முகத்தில் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்து உடலில் கல்லை கட்டி கிணற்றுள் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.