
ஹரியானா மாநிலம் குருகிராமின் சக்கர்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஜன் மாஜி. இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன் மனைவி பற்றி சக்கர்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கொரோனா வைரஸ் மீதான அதீத அச்சம் காரணமாக சுஜன் மாஜியின் மனைவி முன்முன் மாஜி, பள்ளி மாணவனான தனது மகனுடன் கடந்த 3 வருடங்களாக வீட்டிலேயே தன்னை தானே பூட்டிக்கொண்டு அடைப்பட்டிருப்பதாக கணவர் அளித்த புகார் மூலம் தெரியவந்தது.
அவரது புகாரின்படி காவல்துறையினர் சுகாதார அதிகாரிகள், குழந்தைகள் நலத்துறை உறுப்பினர்கள் போன்றோர் அடங்கிய குழு அவரது வீட்டிற்கு விரைந்தது. அதன்பின் அந்த வீட்டின் பிரதான கதவை உடைத்து முன்முன் மாஜியையும், அவரது 10 வயது மகனையும் அந்த குழு மீட்டது. கொரோனா வைரஸ் காரணமாக அப்பெண் பீதியில் இருப்பதாகவும், வீட்டைவிட்டு வெளியேறினால் தன் மகன் இறந்துவிடுவார் என்று அவர் நம்பியதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.