அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான Airbus A330 விமானம், கேட் பகுதியில் இருந்து புறப்படுவதற்குத் தயாராக இருந்தபோது, அதன் ஒரு இஞ்சினில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து விமானத்தில் பயணித்த சுமார் 300 பயணிகள், விமானத்தில் உள்ள அவசர வெளியேற்ற ஸ்லைடுகள் வழியாக விரைந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம், ஏப்ரல் 21ஆம் தேதி காலை 11:15 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.


தீப்பற்றிய காட்சிகள் மற்றும் பயணிகள் வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகின்றன. விமானத்தின் டெயில் பகுதியில் இருந்து புகையும் தீ வெப்பமும் வெளிவந்த காட்சிகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின. விமான நிலையத்தின் விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர் விரைந்து களமிறங்கி தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க புவி விமான பாதுகாப்பு அமைப்பு (FAA) விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அனுப்ப மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.