
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிவிட்டார். இந்த கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. வருகிற 23ஆம் தேதி மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சார்பில் மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
அந்த 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பினர் பதில் அளித்து விட்டனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர். அதில் முக்கிய நிபந்தனைகள் என்னவென்றால் மாநாடு மேடையின் அளவு என்ன? அதில் எத்தனை பேர் அமர போகிறார்கள்? போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்த வேண்டும். மாநாடு முழுவதும் பார்க்கிங் உட்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும். இரண்டு மணிக்கு மாநாடு தொடங்கினால் 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வர வேண்டியது அவசியம்.
இரண்டு மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எந்த பகுதியில் இருந்து எத்தனை பேர் வர உள்ளனர் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும். குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியாக அமர இடம் ஒதுக்க வேண்டும். நடிகர் விஜய் வருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்ட் அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாடு தேதியை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.