
தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தேர்தல் அரசியலுக்கு வந்ததோடு சேர்த்து கணக்கிட்டால் நான் மொத்தமாக 35 ஆண்டுகள் அரசியலில் பயணம் செய்துள்ளேன். ஒரு மாநில கட்சி அந்தஸ்தை பெறுவதற்கே பெரும் பாடுபட நேர்ந்தது. சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து பொருள் மற்றும் சுகத்தை தேடிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு இளமை காலத்தை சொகுசாக கழித்துவிட்டு தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்.
ஆனால் என்னுடைய இளமையை தொலைத்து தூங்காமல், சாப்பிடாமல், வாழ வேண்டிய வாழ்க்கையை வாழாமல், பொழுதுபோக்கு இல்லாமல், நல்ல சாப்பாடு கூட சாப்பிடாமல் சுமார் 35 ஆண்டுகள் பாடுபட்டு இருக்கிறேன். இவ்வளவு சிரமங்களை சந்தித்து தான் நான் இந்த இடத்தை அடைந்துள்ளேன். மாநிலக் கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு வாழ்க்கையை இழந்து இழப்புகளை சந்தித்து தான் பிடித்திருக்கின்றோம். அப்படி இருந்தும் நம்முடைய வளர்ச்சியை பிடிக்காமல் ஜாதி வெறி பிடித்த கும்பல் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை வெட்டி சாய்கின்றனர். மதவெறி பிடித்த கும்பல் நமக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிறார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.