பெங்களூரில் வயாளி காவலர் பைப்லைன் அருகே உள்ள அடுக்குமாடியில் நேபாளத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற ஒரு பெண் வீட்டில் வசித்து வந்திருந்தார். அவர் தன் கணவரையும் பிள்ளைகளையும் பிரிந்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவரது வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.

இதுகுறித்து மகாலட்சுமியின் தாய்க்கும் சகோதரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மகாலட்சுமியின் வீட்டிற்கு வந்து மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்த நிலையில் குளிர்சாதன பெட்டியில் இருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்தவர்கள் குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தபோது அவரின் உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மகாலட்சுமியின் உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மகாலட்சுமி பற்றி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவர் அருகில் உள்ள வணிக விளாகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அவரை தினமும் காலையும் மாலையும் ஒரு இளைஞர் பிக்கப் ட்ராப் செய்து வந்துள்ளார். மேலும் அந்த இளைஞன் சலூன் கடையில் வேலை செய்பவர் என்றும் அவரது மொபைல் கடந்த 10 நாட்களாக அணைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் கிடைத்துள்ளது. அந்த இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நெலமங்களத்தில் வசிக்கும் மகாலட்சுமியின் கணவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 6 தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டுள்ளன.