
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், புதிதாகத் திருமணம் செய்த மணமகளை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 25 ஆம் தேதி மாலா குமாரி என்ற 20 வயது பெண், கன்ஷ்யாம்பூரைச் சேர்ந்த சஞ்சய் ராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அடுத்த நாள் மாலை, தனது தாய் வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், முஹ்தாரியா பாலம் அருகே நான்கு பைக்குகளில் வந்த எட்டு மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் காரை முற்றுகையிட்டு, மணமகளை வலுக்கட்டாயமாக கடத்தினர். காரில் இருந்த மணமகன் மற்றும் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மணமகளின் தாயார் ஜானகி தேவி புகார் அளித்துள்ளார். அவர் கூறியதின்படி, மணமகள் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றுடன் கடத்தப்பட்டுள்ளார். விசாரணையில், மணமகள் கடந்த ஒரு வருடமாக வேறொரு இளைஞருடன் காதல் உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. இதில் அந்த இளைஞன் மற்றும் அவரது கூட்டாளிகளே இந்த சதியை திட்டமிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. மணமகனான சஞ்சய் குமார், மனைவியை மீட்டெடுத்தாலும், தனது குடும்பத்தின் மரியாதைக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக, அவளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
போலீசார் தற்போது கடத்தலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.