விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் மணிகண்டன்- நிஷாந்தினி (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நிஷாந்தினி மாவட்ட எஸ்பி சரவணனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவருடன்  திருமணம் நடைபெற்ற நிலையில் என்னுடைய கணவர் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். அந்த தொழிலை விரிவு படுத்துவதற்காக என்னுடைய கணவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினார். அதன்படி 12.50 லட்சம் ரூபாய் என்னுடைய கணவர் கடனாக வாங்கியிருந்தார். இதற்காக மாதந்தோறும் ரூ.28,293 தவணை பணம் செலுத்தி வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் பணத்தை செலுத்தவில்லை.

இதற்காக அந்த நிறுவனத்திடம் என்னுடைய கணவர் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த சில ஊழியர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அதன்படி சிவபாலன் மற்றும் தமிழ் இலக்கியன் ஆகியோர் வந்த நிலையில் அவர்கள் என்னுடைய செல்போனை உடைத்து விட்டனர். அதோடு பணத்தைக் கேட்டு என்னையும் அடித்து கீழே தள்ளினர். திருமணம் ஆகி நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போது தான் கர்ப்பமானேன். அவர்கள் என்னை தள்ளி விட்டதில் என்னுடைய கரு கலைந்து விட்டது‌. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தான் வீட்டிற்கு திரும்பினேன். இது தொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் அந்த நிதி நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு ஜாமீனில் வெளியே விட்டு விட்டனர். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.